தலச்சிறப்பு |
இலந்தை மரங்கள் நிறைந்த இடமாக இருந்ததால் இத்தலம் 'வெண்பாக்கம்' என்று அழைக்கப்பட்டது. திருவொற்றியூரில் சங்கிலியாரை மணந்த சுந்தரர், தாம் அவளை விட்டு பிரிய மாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுத்தார். திருவாரூரில் திருவிழாவைக் காண, சத்தியத்தை மீறி எல்லையைத் தாண்டியதால் அவருக்கு கண் பார்வை பறிபோனது. அதனால் வழியில் இருந்த இத்தலத்து இறைவனை வணங்கி தமக்கு கண் பார்வை தரும்படி வேண்ட, அவர் தராமல் ஊன்று கோல் மட்டும் தந்தாள். அம்பாள் மின்னல் போல் வெளிச்சம் தந்தாள். இதனால் கோபமடைந்த சுந்தரர், ஊன்று கோலை தூக்கி எறிய, நந்தி தேவர் மீது பட்டு அவரது ஒரு கொம்பு முறிந்தது. மூலவருக்கு ஊன்று கோல் தந்ததால் இத்தலத்து மூலவர் 'ஊன்றீஸ்வரர்' என்றும், அம்பாள் 'மின்னொளியம்மை' என்றும் பெயர் பெற்றனர்.
மூலவர் 'ஊன்றீஸ்வரர்', 'வெண்பாக்க நாதர்' என்னும் திருநாமங்களுடன், அழகிய சிறிய லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பாள் 'மின்னொளியம்மை', 'கனிவாய் மொழியம்மை' என்னும் திருநாமங்களுடன் தரிசனம் தருகின்றாள். நந்தி தேவர் ஒடிந்த கொம்புடன் காட்சி தருகின்றார்.
பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தேவசேனா சமேத ஆறுமுக சுவாமி, நவக்கிரகங்கள், மகாலட்சுமி, ஊன்று கோலுடன் சுந்தரர், எட்டு கரங்களுடன் உள்ள பைரவர் ஆகியோர் தரிசனம் தருகின்றனர்.
சுந்தரர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
|